விடுதியில் விஷ ஊசி போட்டு கல்லூரி மாணவி தற்கொலை


விடுதியில் விஷ ஊசி போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
x

காதலனுடன் ஏற்பட்ட தகராறில் சாதி பெயரை சொல்லி திட்டியதால் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி

காதலனுடன் ஏற்பட்ட தகராறில் சாதி பெயரை சொல்லி திட்டியதால் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கல்லூரி மாணவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மகள் நந்திதா (வயது 19), புதுவை லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் ஆபரேசன் தியேட்டர் டெக்னாஜி படிப்பில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர், லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று அவர் விடுதியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அவருடன் தங்கியிருந்த சக தோழிகள் நந்திதாவை உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நந்திதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர் புதுவைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மகளின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

காதலன் திட்டியதால்...

இது குறித்து லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நந்திதா தனது தோழி ஒருவர் மூலம் அறிமுகமான கரசானூரை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபருடன் பழகியுள்ளார். அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தெரிந்து நந்திதாவின் பெற்றோர், தனது மகளையும், ராஜேஷையும் கண்டித்துள்ளனர். இதன்பின் நந்திதா ராஜேசுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் நந்திதாவை சாதியை சொல்லி ராஜேஷ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர், தான் படிக்கும் கல்லூரி ஆய்வகத்தில் இருந்து விஷ ஊசியை எடுத்து வந்து விடுதியில் தனக்கு தானே செலுத்தி தற்கொலை செய்துள்ளார்.

கடிதம்

மேலும் அவர், தற்கொலை செய்வதற்கான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், காதலன் ராஜேஷ் திட்டியதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக நந்திதாவின் தந்தை முத்துக்குமரன் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story