அரசியல் அமைப்பு சட்டத்தை மீறவில்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அரசியல் அமைப்பு சட்டத்தை மீறவில்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி
அரசியல் அமைப்பு சட்டத்தை மீறவில்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
திறனறி நிகழ்ச்சி
புதுவை கவர்னர் மாளிகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 'திறனறி' நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் போது அரசு பள்ளி மாணவர்கள் சிவவாத்தியம், பரதநாட்டியம், சிலம்பம், பேச்சு, களிமண்-காகிதம் சிற்பம் செய்தல், மல்லர் கம்பம், யோகா, பொம்மலாட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விழா முடிந்தவுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசுக்கு உறுதுணை
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது. என்னை பொறுத்தவரை அரசுக்கு உறுதுணையாக இருந்து வருகிறேன்.
சந்திரபிரியங்கா பதவி விவகாரத்தில் நிர்வாக ரீதியாக சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அவருக்கு, போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறை, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, தொழிலாளர் துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டது. நான் சந்திரபிரியங்காவுக்கு ஆதரவாக இருந்தேன். அவர், தனது துறைகளின் சாதனை பட்டியல்களை வெளியிட்டு இருந்தார். அவர் அனைவரின் ஆதரவு, ஒத்துழைப்பு இல்லாமல் சாதனைகளை செய்திருக்க முடியுமா? முதல்-அமைச்சருக்கு தனது அமைச்சரவையில் உள்ளவர்களை சேர்க்கவும், நீக்கவும் முழு அதிகாரம் உள்ளது. அவர்களின் வேலையை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் முதல்-அமைச்சருக்கு உரிமை உள்ளது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தந்தையை போலவும், அமைச்சர்கள் சகோதரர்களை போலவும் சந்திரபிரியங்காவுக்கு பக்க பலமாக இருந்தார்கள். ஒரு குடும்பமாக பழகியவர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பை சந்திரபிரியங்கா இழந்துவிட்டார். ஒரு பெண் எல்லாவிதத்தில் முன்னேற வேண்டும் என்பதே எனது எண்ணம். சாதி, பாலினத்தையும் குறிப்பிடுவது தவறு.
சட்டத்தை மீறவில்லை
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி எப்போதும் கவர்னர்களுடன் மல்லுக்கட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். புதுவையில் கடந்த காங்கிரஸ் கட்சியில் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதா?. எனவே அவர்களுக்கு இதுபற்றி பேச உரிமை இல்லை.
நான் அரசியல் அமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ எந்த விதத்திலும் மீறவில்லை. சட்ட விதிகளின்படியே நடந்துகொள்கிறேன். கவர்னர் மாளிகை வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து விவகாரத்தில் அரசு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றினால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.