பாகூர் சார்பதிவாளர் பணியிடை நீக்கம்


பாகூர் சார்பதிவாளர் பணியிடை நீக்கம்
x

பத்திரப்பதிவு துறையில் தொடரும் முறைகேடுகளால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பாகூர் சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி

பத்திரப்பதிவு துறையில் தொடரும் முறைகேடுகளால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பாகூர் சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போலி பத்திரங்கள்

புதுவையில் போலி பத்திரங்கள் தயாரித்து வீடு, நிலம் அபகரிப்பது தொடர் கதையாகி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரச்சினை பிரான்ஸ் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதைத்தொடர்ந்து அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளால் போலி பத்திரங்கள் தயாரிப்பது குறைந்தது. இருந்தபோதிலும் தற்போது பிரெஞ்சு பத்திரங்களை மாற்றி எழுதுவது போன்ற செயல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பத்திரப்பதிவுதுறையில் சிலர் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுவை ரெயின்போ நகரில் சமீபத்தில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து வருவாய்த்துறையில் அதிகாரிகளாக பணியாற்றிய ரமேஷ், பாலாஜி, சார்பதிவாளர் சிவசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைதாகியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

அங்கீகாரம் பெறாமல்...

இந்த நிலையிலும் பாகூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பல்வேறு இடங்களில் உரிய அனுமதியின்றி விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனைகள் நடந்துள்ளது.

இவ்வாறு நகரமைப்பு குழுமத்தின் அங்கீகாரம் பெறாமல் உள்ள வீட்டுமனைகளை பதிவு செய்யக்கூடாது என்று விதிமுறைகள் உள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட்டின் உத்தரவும் உள்ளது.

பணியிடை நீக்கம்

ஆனால் அதையும் மீறி பாகூர் சார்பதிவாளர் கஜேந்திரன் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட பதிவாளர் கந்தசாமிக்கு ஆதாரத்துடன் புகார்கள் சென்றன. அவர் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தியபோது அது உண்மை என்று தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் தனது விசாரணை அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தார். அதன்பேரில் சார்பதிவாளர் கஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். அவர் உரிய அனுமதியின்றி புதுச்சேரியை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை பத்திரப்பதிவுத்துறையில் அதிகாரிகள் மீது தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பட்டா மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.


Next Story