தாவரவியல் பூங்காவில் பாரத மாதா சிலை


தாவரவியல் பூங்காவில் பாரத மாதா சிலை
x

தாவரவியல் பூங்காவில் பாரத மாதா சிலையை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

புதுச்சேரி

தாவரவியல் பூங்காவில் பாரத மாதா சிலையை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

தானே புயலில் சேதம்

புதுச்சேரி தாவரவியல் பூங்காவின் மைய பகுதியில் பாரத மாதா சிலை முன்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை கடந்த 2011-ம் ஆண்டு வீசிய தானே புயலின்போது சேதமடைந்தது.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாவரவியல் பூங்காவை ஆய்வு செய்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நடவடிக்கை எடுத்ததன் பேரில் புதிதாக 7½ அடி உயரத்துக்கு பீடத்துடன் கூடிய பாரத மாதா சிலை வடிவமைக்கப்பட்டு, தாவரவியல் பூங்காவில் நிறுவப்பட்டது.

புதிய சிலை திறப்பு

இந்த புதிய சிலை திறப்பு விழா இன்று காலை நடந்தது. விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரத மாதா சிலையை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, வேளாண்துறை செயலாளர் குமார், இயக்குனர் பாலகாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபதம் ஏற்போம்

பாரதியார், பாரத மாதா சிலை உருவாக்க எண்ணினார். அதற்கான வரை படத்தை அவர் உருவாக்கினார். அதன் அடிப்படையில் இங்கு பிரெஞ்சு கலைஞர் வரைந்த மாதா ஓவியம் இருந்தது. அது திருப்தி தரவில்லை. அலங்காரத்துடன் பாரத மாதா இருக்க விரும்பியதால், அதன்பின் புதிய சிலை உருவாக்கப்பட்டு, தாவரவில் பூங்காவில் வைக்கப்பட்டது.

தானே புயலில் இந்த சிலை சேதமடைந்திருந்த நிலையில், நான் கவர்னராக வந்தபோது இங்கு வந்து பார்த்தேன். பின்னர் சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமியிடம் தெரிவித்து, பழமை மாறாமல் பாரத மாதா சிலை உருவாக்க சொன்னேன்.

தற்போது ஜி-20 மாநாட்டை பாரத தேசம் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும்போது புதுச்சேரியில் பாரத மாதா சிலை நிறுவப்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் புதுச்சேரி வளர்ச்சி அடைய நாம் பாடுபட பாரத மாதா சிலை முன்பு சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story