எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு 13-ந் தேதி தொடங்குகிறது
புதுவை மாநிலத்தில் 13-ந் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி.,பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை 44 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
புதுச்சேரி
புதுவை மாநிலத்தில் 13-ந் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி.,பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை 44 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 ஆயிரம் பேர்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை புதுவை, காரைக்காலில் நடத்தப்படுகிறது. இதற்காக புதுச்சேரி பகுதியில் 33 மேல்நிலை தேர்வு மையங்களும், 38 இடைநிலை தேர்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 10 மேல்நிலை தேர்வு மையங்களும், 13 இடைநிலை தேர்வு மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதற்கான மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வை புதுவையில் 44 அரசு மற்றும் 86 தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 332 பேர், காரைக்காலில் 11 அரசு மற்றும் 17 தனியார் பள்ளிகளை சேர்ந்த 2,359 பேர் என 14 ஆயிரத்து 691 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ்-1 தேர்வை புதுவையில் 12 ஆயிரத்து 138 பேர், காரைக்காலில் 2 ஆயிரத்து 233 பேர் என 14 ஆயிரத்து 371 பேர் எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை புதுவையில் 82 அரசு மற்றும் 147 தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 972 பேர், காரைக்காலில் 25 அரசு மற்றும் 34 தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,979 மாணவர்கள் என 14 ஆயிரத்து 951 பேர் எழுதுகின்றனர்.
ஆக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை 44,013 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
தேர்வு வினாத்தாள், விடைத்தாள் கொண்டு செல்ல தேர்வு மையத்துக்கு பாதுகாப்புக்கு ஆயுதம் ஏந்திய போலீசார், தேர்வின்போது தடையின்றி மின்சார சேவை ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீனம்
தேர்வுக்கூட அனுமதிசீட்டு (ஹால்டிக்கெட்) இல்லாத மாணவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தனித்தேர்வர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புகை சீட்டு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து தனியார் கணினி மையம் மூலம் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு அறை மற்றும் தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் புரியும் குற்றத்துக்கு ஏற்ப தண்டனைகள் அளிக்கப்படும். எனவே தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.