மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
மணக்குள விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தேவஸ் தானம் சார்பில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
மூலவர் தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி யளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை முதல் மழை பெய்து கொண்டே இருந்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடையை பிடித்தபடி கோவிலுக்கு வந்தனர்.
ரங்கசாமி சாமி தரிசனம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று காலை மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இடைவிடாது பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் இன்று பக்தர்கள் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.
பிரம்மோற்சவ விழா தொடங்கியது
மணக்குள விநாயகர் கோவிலின் 62-வது பிரம்மோற்சவ விழா இன்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது. 9-ந் தேதி காலை 7 மணிக்கு ரதோற் சவம், தொடர்ந்து கன்யா லக்னத்தில் திருத்தேர் வீதியுலா நடக்கிறது. 10-ந் தேதி காலை நர்த்தன கணபதி நேரடி உற்சவம், பவுர்ணமி கடல் தீர்த்தவாரி வெள்ளி மூஷிக வாகன சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.
11-ந் தேதி காலை 11 மணிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம், 15-ந் தேதி காலை கிருத்திகை, இரவு பால சுப்ரமணியர் உற்சவம், வெள்ளி மயில் வாகன வீதி உலாவும் நடக்கிறது. விழாவில் 17-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும், 18-ந் தேதி விடையாற்றுதல் உற்சவமும், 22-ந் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. விழாவில் 23-ந் தேதி மதியம் உற்சவ சாந்தி நிகழ்ச்சியும், 108 சங்காபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது.