புதிதாக பதிவோருக்கு விரைவில் முதியோர் உதவித்தொகை


புதிதாக பதிவோருக்கு விரைவில் முதியோர் உதவித்தொகை
x

புதிதாக பதிவோருக்கு விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பெருமிதத்துடன் கூறினார்.

காரைக்கால்

புதிதாக பதிவோருக்கு விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பெருமிதத்துடன் கூறினார்.

விலையில்லா சைக்கிள்

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மழைக்கோட்டும், 2023-24-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மழைக் கோட்டுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-

புதுச்சேரியில் மக்களை மதிக்கக்கூடிய ஒரு அரசாங்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒதுக்கப்பட்ட நிதியை மக்கள் திட்டங்களுக்காக சிறப்பாக செய்து வருகிறோம். முக்கியமாக, கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட விலையில்லா சைக்கிள், மழைக் கோட்டு திட்டத்திற்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி புத்துயிர் கொடுத்துள்ளார். அதனால் மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

உதவித்தொகை உயர்வு

அதேபோல் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக பதிவோருக்கு விரைவாக முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இது அவர்கள் சொந்தமாக முன்னேறுவதற்கு ஒரு உந்து கோளாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மேல்நிலைப்பள்ளி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், சமூக நலத்துறை துணை இயக்குனர் சத்யா, வ.உ.சி. அரசு மேல்நிலை பள்ளி துணை முதல்வர் கனகராஜ் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

இதைத்தொடர்ந்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் 'காரைக்கால் கால்நடைத்துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களில் காரைக்காலை சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள். மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் கடைமடை பகுதியாக காரைக்காலுக்கு தண்ணீர் வருவதற்குள் நீர் நிலைகள், பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும்' என்றார்.

காரைக்காலில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைவதற்கான இடத்தையும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.


Next Story