பார்வையாளர்களை கவர்ந்த மணல் சிற்பங்கள்


காரைக்கால் கடற்கரையில் உருவாக்கப்பட்ட மணல்சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

காரைக்கால்

காரைக்கால் கடற்கரையில் உருவாக்கப்பட்ட மணல்சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சுற்றுலா தின விழா

காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் இணைந்து ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின விழாவை சிறப்பாக நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே வினாடி-வினா, பீச் வாலிபால், கபடி, மணல் சிற்பம், புகைப்பட போட்டி, புதையல் வேட்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கடற்கரை சாலையில் சுற்றுலா தின விழா நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தார். விழாவில் துணை கலெக்டர் ஜான்சன், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை சேர்ந்த ராஜவேலு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மணல் சிற்பங்கள்

சுற்றுலா தின விழாவையொட்டி கடற்கரையில் ஆரோவில் தியான மையம், மாயன் பிரமிடு, புத்தர், தஞ்சை பெரியகோவில், ஏசுநாதர் சிலைபோன்ற மணல் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை அமைச்சர் மற்றும் கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் மணல் சிற்பத்தை உருவாக்கியவர்களை வெகுவாக பாராட்டினர்.

தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இந்த மணல் சிற்பத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

விழாவையொட்டி லஷ்மன் சுருதியின் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாட்டுப்புற கலைகளான கரகாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழா நிறைவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story