மளிகை கடைக்காரரை உல்லாசத்துக்கு அழைத்து ரூ.1¼ லட்சம் பறிப்பு
வில்லியனூர் அருகே மளிகை கடைக்காரரை உல்லாசத்துக்கு அழைத்து ரூ.1¼ லட்சம் பறித்துச்சென்ற வழக்கில் இளம்பெண்ணை வைத்து கைவரிசை காட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்
மளிகை கடைக்காரர்
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 50). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கருணாகரன் கடையில் இருந்தபொது சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். அவர், கருணாகரனிடம் தனது பெயர் வனிதா என்று அறிமுகம் செய்துகொண்டார்.
மேலும், அனாதையான தான், உறவினர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருவதாகவும், தற்போது சூழ்நிலை சரியில்லாததால், தங்கள் வீட்டில் தங்க இடம் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார்.
பரிதாப பேச்சு
இளம்பெண் பரிதாபமாக பேசியதால், மனமுருகிய கருணாகரன், தங்கள் வீட்டு மாடியில் ஒரு அறை உள்ளதாகவும் அங்கு வந்து தங்கிக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த இளம்பெண், கருணாகரனின் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு, மறுநாள் வருவதாக கூறிவிட்டு சென்றார்.
மறுநாள் கருணாகரனுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி பழகி வந்தார். பின்னர் 2 நாட்கள் கழித்து வில்லியனூரில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் தான் இருப்பதாகவும், அங்கு வருமாறும் கருணாகரனுக்கு போன் செய்து அழைத்துள்ளார். இதையடுத்து கருணாகரன் ஜூஸ் கடைக்கு சென்றார். அங்கு இளம்பெண்ணை பார்த்த அவர், அவரது அழகில் மயங்கினார்.
உல்லாசத்துக்கு அழைத்து...
இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, சகஜமாக பேசினர். அப்போது, இளம்பெண், திடீரென்று நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை கேட்டு கருணாகரன் இன்ப அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அன்று இரவு 7.30 மணியளவில் போன் செய்து, வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை சுடுகாட்டு சாலையில் உள்ள பம்புசெட்டுக்கு வருமாறு கூறினார். உடனே கருணாகரன் அங்கு வந்தார். இருவரும் உல்லாசமாக இருக்க ஆயத்தம் ஆனார்கள்.
அப்போது அங்கு முட்புதரில் பதுங்கியிருந்த 3 பேர் செல்போனில் படம் பிடித்தபடி டார்ச் லைட் அடித்துக்கொண்டு கருணாகரனை நோக்கி வந்தனர். அருகில் வந்த 3 பேரும் வனிதாவை பெயர் சொல்லி அழைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாகரன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பதற்றமானார்.
பணம் பறிப்பு
பின்னர் அவர் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஜிபே மூலம் ரூ.50 ஆயிரம், கடன் வாங்கி வைத்திருந்த ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். இதுபற்றி போலீசில் தெரிவித்தால், பெண்ணுடன் இருக்கும் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு சென்ற கருணாகரன், தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து மனவருத்தத்தில் இருந்தார். இதுபற்றி குடும்பத்தினர் அவரிடம் விசாரித்தபோது, நடந்த விவரத்தை கூறியுள்ளார்.
2 பேர் கைது
பின்னர் பணம் பறிக்கப்பட்டது குறித்து வில்லியனூர் போலீசில் கருணாகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், இளம்பெண்ணை வைத்து வில்லியனூர் செல்வா நகரை சேர்ந்த ராமு (21), புதுநகர் அருண்குமார் (21), பிரகாஷ் ஆகியோர் கருணாகரனிடம் பணம் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து வனிதா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதில் ராமு, அருண்குமார் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். வனிதா, பிரகாஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மளிகை கடைக்காரரை உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறிக்கப்பட்ட சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.