ரோடியர், பாரதி, சுதேசி மில்களை திறக்க முடியாது
மக்கள் வரிப்பணத்தை எவ்ளவுதான் செலவு செய்வது? என்றும், புதுச்சேரியில் மூடப்பட்ட ரோடியர், பாரதி, சுதேசி மில்களை மீண்டும் திறக்க முடியாது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்ட வட்டமாக தெரிவித்தார்.
புதுச்சேரி
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
சர்க்கரை ஆலை திறப்பு
சிவசங்கர் (சுயே) கேள்வி: புதுவை மாநிலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்க 3 பஞ்சாலைகள், 2 நூற்பாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து நடத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில்: புதுவை கூட்டுறவு நூற்பாலையில் தனியார் பங்களிப்புடன் ஒரு பகுதியை நவீனப்படுத்துதல், நீண்டகால குத்தகைக்கு விடுதல் ஆகிய பரிந்துரைகளை நிபுணர் குழு வழங்கியுள்ளது. அது அரசின் பரிசீலனையில் உள்ளது. இதே பரிந்துரையை ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நூற்பாலைக்கும் வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகள் அமைச்சரவை முடிவின்படி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுளளது. புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் திறக்கவே முடியாது
அதே வேளையில் ரோடியர், பாரதி, சுதேசி மில்களை மீண்டும் திறக்கவே முடியாது. இதற்காக நிறைய மக்களின் வரிப்பணத்தை செலவு செய்துள்ளோம். இனி மில்களை ஓட்ட வாய்ப்பே இல்லை. தொழிலாளர் சட்டப்படி அங்கு பணிபுரிந்து ஊழியர்களுக்கு உரிய நிதியை வழங்கி வருகிறோம். அங்கு வேறு என்ன செய்யலாம்? என்று ஆலோசனை செய்து வருகிறோம். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் யூனிட்டுக்கு ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு லைசென்சு கொடுக்க உள்ளோம்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: மில் வளாகத்தில் ஆயத்த ஆடை, பின்னலாடை தயாரிப்புகளை செய்யலாம். இதற்காக கோவை, திருப்பூரிலிருந்து ஏராளமானவர்கள் வருவார்கள். நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க கூறிவிட்டு அதை செய்யுங்கள். கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறக்க முடியாது. அதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். எனவே அதற்குரிய பணிகளை விரைவாக செய்யுங்கள்.
பலன் இருக்காது
அனிபால் கென்னடி (தி.மு.க.) : மில்கள் மூடப்படுவதால் வேலைவாய்ப்பு கிடைக்காது என்று இளைஞர்கள் பயப்படுகிறார்கள்.
ரங்கசாமி: எல்லா மில்களையும் திறந்து நடத்தி பார்த்தவன் நான். அது உங்களுக்கு தெரியுமா?. எவ்வளவுதான் மக்கள் வரிப்பணத்தை வீணாக செலவு செய்வது?. எவ்வளவு நிதி செலவு செய்தாலும் அதற்குரிய பலன் இருக்காது.
இவ்வாறு விவாதம் நடந்தது.