அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலை மறியல்


அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலை மறியல்
x

தீபாவளி உதவித்தொகை வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

தீபாவளி உதவித்தொகை வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீபாவளி உதவித்தொகை

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500 வழங்கக்கோரி தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்காவின் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ஏ.ஐ.டி.யு.சி. அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதற்காக அவர்கள் நேற்று காலை மிஷன் வீதி மாதா கோவில் அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து சட்டசபையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் ஆம்பூர் சாலை அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுப்புகட்டைகளை வைத்து தடுத்து நிறுத்தினார்கள். இருப்பினும் தொழிலாளர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேறி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சாலை மறியல்

இந்தநிலையில் அவர்கள் செஞ்சி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். இதனிடையே மறியலில் ஈடுபட்டவர்களுடன் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உதவித்தொகை தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேச நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

முதல்-அமைச்சருடன் சந்திப்பு

தொடர்ந்து ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் அபிசேகம், பொதுச்செயலாளர் சேதுசெல்வம், செயலாளர்கள் தயாளன், முத்துராமன், துணைத்தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.


Next Story