பழுதான அரசு வீடுகளுக்கு வாடகை உயர்வு


அன்பு நகரில் மேற்கூரை பெயர்ந்து கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டு பழுதாகி உள்ள அரசு வீடுகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டது குறித்து குடியிருப்பு வாசிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

திருநள்ளாறு

அன்பு நகரில் மேற்கூரை பெயர்ந்து கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டு பழுதாகி உள்ள அரசு வீடுகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டது குறித்து குடியிருப்பு வாசிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

பழுதான வீடுகள்

காரைக்கால் அன்புநகரில் புதுச்சேரி அரசு குடிசைமாற்று வாரியத்துக்கு சொந்தமான 12 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் 146 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த வீடுகளில் ஏழை, நடுத்தர மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது முதல் தற்போது வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது வீட்டின் மேற்கூரையின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து வருகிறது.

கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுவது தொடர் கதையாக உள்ளது. சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்ததில் சிலர் காயமும் அடைந்துள்ளனர். எப்போதும் ஒருவித அச்சத்துடனேயே இங்கு மக்கள் வசித்து வரும் நிலை இருந்து வருகிறது.

கட்டிடத்தின் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகளும் தற்போது வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன. மழை காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் ஒழுகுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வாடகை உயர்வு

இந்தநிலையில் குடிசை மாற்று வாரியத்தில் ரூ.100 ஆக இருந்து வந்த நிலையில் திடீரென்று ரூ.350 ஆக வீட்டு வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வாடகை கட்டணம் உயர்த்தியதை திரும்ப பெறவேண்டும், மோசமான நிலையில் உள்ள கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து குடியிருப்புவாசிகள் மனு கொடுத்து முறையிட்டனர்.



Next Story