புதுவையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


புதுவையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

மாணவன் விபத்தில் பலியான சம்பவம் எதிரொலியாக புதுவை ரெட்டியார்பாளையம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

புதுச்சேரி

மாணவன் விபத்தில் பலியான சம்பவம் எதிரொலியாக புதுவை ரெட்டியார்பாளையம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மாணவன் பலி

புதுவை இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் நேற்று முன்தினம் காலை 2 விபத்துக்கள் அடுத்தடுத்து நடந்தன. இதில் பள்ளி மாணவன் கிருஷ்வாந்த் தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானான். மேலும் காலாப்பட்டு நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று தறிகெட்டு ஓடி தடுப்பு சுவரில் ஏறியது.

விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் புதுவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்திரா காந்தி சதுக்கம் முதல் மூலக்குளம் வரை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசாருடன் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டன. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் நகரின் முக்கிய சிக்னல்களான ராஜீவ்காந்தி சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம், மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று காலை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், மோகன்குமார், பக்தவச்சலம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story