உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்


உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்
x

புதுச்சேரியில் மழையின்போது மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் மழையின்போது மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கியது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 25). இவர், தனது நண்பர் ஜெகதீசுடன் (28) புதுச்சேரியில் தங்கியிருந்து சோபா பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார்.

நேற்று இரவு அரியாங்குப்பம் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு நண்பர் ஜெகதீசுடன் மோட்டார் சைக்கிளில் மணி வந்தார். மழையின் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அரியாங்குப்பம் புது பாலத்தில் நின்றபோது, மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி மணி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ஜெகதீஷ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலைமறியல்

இந்தநிலையில் மின்துறையின் அஜாக்கிரதையால் தொழிலாளி இறந்துவிட்டதாகவும், அவரது குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் மணியின் உறவினர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இன்று மதியம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்த கோரிமேடு போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைத்தனர். அப்போது இழப்பீடு வழங்குவது குறித்து கலெக்டரிடம் பேசுமாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மணியின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட கலெக்டர் வல்லவனை சந்தித்து இழப்பீடு வழங்குவது தொடர்பாக முறையிட்டனர். அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இதனை ஏற்று அவர்கள், மணியின் உடலை வாங்கிச் சென்றனர்.


Next Story