உருவச்சிலைக்கு, ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் தினம்
புதுச்சேரி அரசு சார்பில் திருவள்ளுவர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு புதிய பஸ்நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.
தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுபோல லப்போர்த் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்திலும் திருவள்ளுவர் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார், முன்னாள் எம்.பி.திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வரும் போது 'தமிழ்நாடு வாழ்க' என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
பா.ம.க.
பா.ம.க. சார்பில் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் நோணாங்குப்பம் படகு குழாம் எதிரே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் வடிவேல், வன்னியர் சங்க பொருளாளர் நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் மன்றம்
திருவள்ளுவர் மன்றம் சார்பில் அதன் நிறுவனர் ராமலிங்கம் தலைமையில் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துரைமாலிறையன், இராதே, தமிழ்நெஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.