மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்
x

மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியலில ஈடுபட்டனர்.

புதுச்சேரி

மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியலில ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், மத்திய அரசை கண்டித்தும் புதுவை அண்ணாசிலை அருகில் இருந்து புதுச்சேரி ரெயில் நிலையம் நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை ஊர்வலமாக புறப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் சுப்பையா சாலை வழியாக பில்லுக்கடை சந்து அருகே வந்தபோது, அங்கு தடுப்புகளை வைத்து ஒதியஞ்சாலை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சிலர் போலீசாரின் தடுப்பை மீறி ஓடிச் சென்று ரோடியர் பேட் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த ரெயில் சிறிது தூரத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டது.

இதனைதொடர்ந்து போலீசார் ரெயில் மறியல் மற்றும் போராட்டத்திற்கு வந்த பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்தனர்.

காரைக்கால்

இதனால் 15 நிமிடம் தாமதமாக அந்த ரெயில் புதுச்சேரி ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதேபோல் காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் செய்ய காரைக்கால் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காரைக்கால் நகர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.

பின்னர் அவர்கள் தஞ்சாவூர் செல்ல இருந்த பயணிகள் ரெயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story