ரூ.91 கோடியில் புதுவை ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடக்கம்


ரூ.91 கோடியில் புதுவை ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடக்கம்
x

புதுவை ரெயில் நிலையத்தில் ரூ.91 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடங்குவதற்காக 100 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றப்பட்டது.

புதுச்சேரி

புதுவை ரெயில் நிலையத்தில் ரூ.91 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடங்குவதற்காக 100 ஆண்டு பழமையான மரம் வெட்டி அகற்றப்பட்டது.

மேம்பாட்டு பணிகள்

இந்தியாவில் உள்ள 40 ரெயில் நிலையங்களை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி ரெயில் நிலையமும் அடங்கும். இங்கு ரூ.91 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதாவது 5 ஏக்கர் பரப்பளவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. பெருநகரங்களில் உள்ளதுபோல் ரெயில் நிலைய பகுதிக்குள்ளேயே பஸ்கள் வந்து செல்லும் வசதி செய்யப்பட உள்ளது.

நகரும் படிக்கட்டுகள்

மேலும் வணிக வளாகங்கள், பயணிகளுக்கான தங்கும் அறைகள், ரெயில்வே ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்), லிப்ட்டுகள், பிளாட்பாரங்களுக்கு செல்ல மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

தற்போது உள்ள ரெயில்நிலைய கட்டிட பகுதிகளில் இவை அமைய உள்ளன. புதிய கட்டிடங்கள் கட்ட இந்த இடத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டியுள்ளது.

தற்காலிக அலுவலகம்

முதற்கட்டமாக தற்போது இங்கு செயல்படும் அலுவலகங்கள், முன்பதிவு அலுவலகம் என அனைத்தும் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டு அங்கு செயல்பட திட்டமிடப்பட்டு உள்ளது. தற்காலிக அலுவலகம் அமைக்க வசதியாக ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டும் பணி நேற்று நடந்தது.

100 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று கட்டிடங்களின் மீது படர்ந்து இருந்தது. அதை வெட்டும்போது கட்டிடங்கள், பிளாட்பாரத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழல்கூரைகளின் மேல் விழுந்து விடாமல் இருக்க ராட்சத கிரேன் மூலம் கிளைகள் கட்டிங் மெஷின் மூலம் அறுத்து அகற்றப்பட்டன. நேற்று முழுவதும் இந்த பணிகள் நடந்தன.

20 மாதங்களில் முடிக்க திட்டம்

தற்போது அலுவலகங்கள் செயல்பட்டு வரும் கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிட கட்டுமான பணிகள் தொடங்க 6 மாதம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. அதன்பின் புதிய கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு 20 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story