புதுச்சேரி: கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்லத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு


புதுச்சேரி: கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்லத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
x

கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்லத்தில் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது. லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.

புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது. கோவிலுக்கு வரும் குழந்தைகள், பெரியவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் யானை லட்சுமியிடம் ஆசி வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது. சுமார் 25 ஆண்டுகளாக மணக்குள விநாயகர் கோவிலில் வளர்க்கப்பட்ட யானை, இன்று உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இன்று காலை முதலே யானை லட்சுமியின் உடலுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பலர் கண்ணீர் மல்க யானைக்கு அஞ்சலி செலுத்தியதை காணமுடிந்தது. புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். யானை லட்சுமியின் மறைவு புதுச்சேரியில் அனைவரின் வீட்டிலும் ஏற்பட்ட ஒரு இழப்பை போன்றது என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து யானை லட்சுமியின் உடலை அடக்கம் செய்வதற்காக ஏ.வி.எஸ். நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து கிளம்பி நேரு வீதி, அண்ணா சாலை, கடலூர் சாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்றது.

மணக்குள விநாயகர் கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் மட்டுமின்றி, புதுச்சேரி மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு யானை லட்சுமிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.


Next Story