புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தி.மு.க.வினர் சந்திப்பு
புதுவை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இன்று காலை சந்தித்துப் பேசினார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. தலைமையில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர். அப்போது அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் இல்லாத நிலை இருந்து வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு போன்றவற்றை அமல்படுத்த மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.
மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. அதற்கு சாதகமான ஒப்புதல் அளித்து அந்தஸ்துடன் கூடிய மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டிய முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிட வேண்டும். மேலும் மத்திய நிதிக்குழுவில் சேர்த்திடவும், மாநிலத்தின் கடனை தள்ளுபடி செய்யவும் உதவிட வேண்டும்.
ஜனநாயகம் கேள்விக்குறி
முதல்-அமைச்சர் கடமையை செய்ய இயலாமல் தவிப்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. கவர்னரின் அதிகார வரம்பால் அரசு எந்திரம் முடங்குவது தவிர்க்கப்பட வேண்டும்.
புதுவையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை இந்த ஆண்டே நிரப்ப நடவடிக்கை எடுக்கவும், புதிய தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கவும் உத்தரவிட வேண்டும்.
மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் திறந்திட மத்திய அரசு மூலம் நிதி கிடைக்க உதவிட வேண்டும். காரைக்கால் பகுதியை முன்னேற்றுவதற்கான சிறப்பு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வினர்
அ.தி.மு.க.வினர் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழக உடையார் ஆகியோர் ஜனாதிபதியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க 15 முறைக்கு மேல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தாங்கள் மாநில அந்தஸ்து வழங்க பரிந்துரைத்தால் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
நியமன எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுப்பதற்கான விதியை திரும்பப்பெற வேண்டும். அல்லது சரியான வழிகாட்டுதல்களை உருவாக்கவேண்டும். ஜிப்மர் பணியாளர் தேர்வில் 25 சதவீத இடங்களை உள்ளூர் மக்களுக்கு வழங்கவேண்டும். புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.
எய்ம்ஸ்- ஐ.ஐ.டி.
உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த புதுவைக்கு ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு மானியம் வழங்கவேண்டும். அரவிந்தர் ஆசிரமம், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ், ஐ.ஐ.டி. ஆகியவற்றை நிறுவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.