தூய்மை கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு
புதுவை உழவர்கரை நகராட்சி ஆணையர் தூய்மை கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரங்களின் தூய்மை பற்றிய கணக்கெடுப்பு செய்து தூய்மையான நகரங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டு வருகிறது. உழவர்கரை நகராட்சியும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரங்களின் தூய்மை பற்றிய கணக்கெடுப்பில் ஒவ்வொரு ஆண்டும் பங்கு பெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான தூய்மை பற்றிய கணக்கெடுப்பு ஸ்வச் சர்வேசன்-2023 என்ற பெயரில் நடக்கிறது.
இதன் ஒரு பகுதியான நகரின் தூய்மை பற்றி அறிய நேரடி கள ஆய்வும் மற்றும் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியில் கருத்துக்களை பெறும் நடவடிக்கைகள் ஜூலை முதல் வாரத்தில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைவரும் http://sbmuban.org/feedback என்ற இணையதள முகவரியில் தங்கள் செல்போன் எண்ணை பதிவிட்டு, புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சியை தேர்வு செய்து அதில் கேட்கப்படும் 4 கேள்விகளுக்கு பதிலை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் தூய்மை பற்றிய கணக்கெடுப்பில் உழவர்கரை நகராட்சியை சிறந்த நிலையை பெற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.