சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வில்லியனூர்

அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கர் சிலை அகற்றம்

ஏம்பலத்தை அடுத்த கம்பளிகாரன்குப்பம்பேட் பகுதியில் அம்பேத்கருக்கு சிலை வைப்பது தொடர்பாக இருவேறு ஆதிதிராவிடர் அமைப்புகளுக்கு இடையே போட்டி நிலவியது. இந்தநிலையில் ஒரு அமைப்பு சார்பில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோவில் நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, சிலையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்தநிலையில் அம்பேக்தர் சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் ஆதி திராவிடர் அமைப்பினர் வில்லியனூர் தெற்கு பகுதி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரரெட்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் போலீசார், வருவாய்த்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் கார்த்திகேயன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக சப்-கலெக்டரிடம் முறையிடுமாறு கேட்டுக்கொண்டார்.

3 நாட்களில் நடவடிக்கை

இதையடுத்து பொதுமக்கள் சார்பாக ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அருள்தாஸ், பகுஜன் சமாஜ் கட்சி மூர்த்தி, விடுதலை சிறுத்தை ஒழுங்கு நடவடிக்கை குழு திருவரசன் மற்றும் பொதுமக்கள் சப்-கலெக்டர் முரளியை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உரிய ஆய்வு நடத்தி 3 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story