பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தவறு செய்தால் என்ன நடவடிக்கை?


பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தவறு செய்தால் என்ன நடவடிக்கை?
x

புதுவை அரசின் பி.ஆர்.டி.சி. (சாலை போக்குவரத்து) ஊழியர்கள் தவறு செய்தால் என்னென்ன தண்டனை வழங்கலாம் என்று அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

புதுச்சேரி

புதுவை அரசின் பி.ஆர்.டி.சி. (சாலை போக்குவரத்து) ஊழியர்கள் தவறு செய்தால் என்னென்ன தண்டனை வழங்கலாம் என்று அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

கீழ்ப்படியாமை

புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) சுமார் 800 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணியின்போது செய்யும் தவறுகள் தொடர்பாக எந்தெந்த விதமான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிரந்தர பணியாளர்கள், தினக்கூலி, ஒப்பந்த ஊழியர்களுக்கு என தனித்தனியே தண்டனைகள் வழங்கப்படும். அதன்படி கீழ்படியாமைக்கு 90 நாட்கள் வரை நிரந்தர பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யலாம். அதேநேரத்தில் தினக்கூலி, ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம்.

சேதம் ஏற்படுத்தினால்...

கழக சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினால் அதற்கு சமமான அபராதம் விதிக்கலாம். திருட்டு, மோசடி செயல்களில் ஈடுபட்டால் நிரந்தர பணியாளர்களை 120 நாட்கள் வரை பணியிடை நீக்கம் செய்யலாம். ஒரு ஊதிய உயர்வினையும் நிறுத்தி வைக்கலாம். 2-வது முறை அதே தவறை செய்தல் ஓராண்டு வரை பணியிடை நீக்கம் செய்யலாம். 3-வது முறையும் அதை தொடர்ந்தால் பணியை விட்டு நீக்கலாம்.

தினக்கூலி, ஒப்பந்த ஊழியர்கள் அதே குற்றத்தை செய்தால் உடனடியாக பணிநீக்கம் செய்யலாம். உரிய அனுமதியின்றி விடுப்பு எடுத்தால் நிரந்தர ஊழியர்களுக்கு முதல் முறை எச்சரிக்கையும், 2-வது முறை ஊதிய உயர்வினையும் நிறுத்தி வைக்கலாம். அதே தவறை 3-வது முறை செய்தால் பணியிடை நீக்கமோ, பணிநீக்கமோ செய்யலாம்.

பணிநீக்கம்

பணியின்போது தூங்கினால் முதல்முறை 10 நாளும், 2-வது முறை 30 நாட்கள் வரையிலும் 3-வது முறையும் தொடர்ந்தால் 90 நாட்கள் வரை பணியிடை நீக்கமும் செய்யலாம். கழக அலுவலக வளாகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டால் பணியிடை நீக்கமும், 3 முறை தொடர்ந்தால் பணிநீக்கமும் செய்யலாம்.

இவ்வாறு 93 வகையான குற்றங்கள் பட்டியலிடப்பட்ட அவற்றுக்கான தண்டனைகளும் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளன.


Next Story