பி.ஆர்.டி.சி. பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி


பி.ஆர்.டி.சி. பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
x

புதுவையில் பிற மாநிலங்களுக்கு செல்லும் பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

புதுச்சேரி

பிற மாநிலங்களுக்கு செல்லும் பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

15 ஆண்டுகள்

மத்திய அரசின் வாகன அழிப்பு கொள்கையின்படி 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படும். அதில் தேர்ச்சி பெறாத வாகனங்கள் அழிக்கப்பட வேண்டும். அதன்படி 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

புதுவை சாலை போக்குவரத்து கழகத்துக்கு (பி.ஆர்.டி.சி.) சொந்தமான 130 பஸ்களில் 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. புதிய வாகன கொள்கையின்படி பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களுக்கான சாலை வரியை அதற்கான ஆன்லைன் போர்ட்டலில் செலுத்த முடியவில்லை.

22 பஸ்கள் நிறுத்தம்

இதனால் ஏற்கனவே வேளாங்கண்ணி, நாகர்கோவில், காரைக்கால் பகுதிகளுக்கு செல்லும் 8 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. தற்போது திருப்பதி, குமுளி, சென்னை, காரைக்கால் பகுதிகளுக்கு செல்லும் மேலும் 14 பஸ்கள் என ஒட்டு மொத்தமாக 22 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னைக்கு தினமும் 13 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 5 பஸ்களே இயக்கப்படுகின்றன. இதேபோல் காரைக்காலுக்கு 5 பஸ்கள் இயங்கிய நிலையில் 2 பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன.

பி.ஆர்.டி.சி. பஸ்கள் மூலம் நாளொன்றுக்கு ரூ.7 லட்சம் வருமானம் வந்தநிலையில் தற்போது ரூ.4 லட்சமாக குறைந்துவிட்டது. இதனால் பி.ஆர்.டி.சி. அதலபாதாளத்துக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.

அறிவிப்புக்கு பஞ்சமில்லை

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை புதிய பஸ்கள் வாங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதன்பின் பஸ்கள் எதுவும் புதியதாக வாங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி இருக்கிற பஸ்சையும் பழுதுநீக்கி ஓட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆனால் ஆண்டுதோறும் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று அறிவிப்புகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. ஆனால் அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஏதும் இல்லை. இதனால் கிராமப்புற பொதுமக்களும், பயணிகளும் அவதியடைந்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் வருமானமும் பாதித்துள்ளது.

அலைமோதிய கூட்டம்

வழக்கமாகவே வார விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைக்கு செல்பவர்கள் பஸ் நிலையத்தில் அலைமோதுவார்கள். நேற்று மே தின விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவை வந்த நிலையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் அவதியடைந்தனர்.


Next Story