காதலர் தினத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

புதுவையில் காதலர் தினத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்க்ப்பட்டனர்.
புதுச்சேரி
புதுவையில் காதலர் தினத்தை கொண்டாட வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான காதல் ஜோடிகள் வந்து இருந்தன. காதலர் தினத்தையொட்டி வர்த்தக நிறுவனங்கள் சார்பில் பல்வேறு சலுகைகளை அறிவித்து இருந்தன. இந்தநிலையில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அண்ணா சாலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த காதலர் தின வாழ்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் காதலர் தின வாழ்த்து அட்டைகளை தீவைத்து கொளுத்தினார்கள்.
இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீசார் இந்து முன்னணியினர் 10 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் பெரியகடை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.