புதிய மதுக்கடைக்கு அரசு அனுமதியை எதிர்த்து மறியல்
கீழவாஞ்சூரில் புதிய மதுக்கடைக்கு அரசு அனுமதியை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழவாஞ்சூர்
கீழவாஞ்சூரில் புதிய மதுக்கடைக்கு அரசு அனுமதியை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய மதுக்கடைக்கு அனுமதி
திரு-பட்டினத்தை அடுத்த கீழவாஞ்சூரில் புதிதாக மதுக்கடை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே கலெக்டரிடம் மனு, போஸ்டர்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக கிராம மக்கள் ஆட்சேப குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும் ஆர்ப்பாட்டம் தொடர் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
இந்த நிலையில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமையவிருக்கும் மதுபானக்கடை முன்பு கிராமத்தினர் திரண்டனர். பின்னர் சென்னை-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்லூரி, பள்ளி மற்றும் கடைகளுக்கு சென்று திரும்பும் பாதையில் மது கடை அனுமதியால் பாதுகாப்பற்ற சூழல் அமையும் என்றும், குற்றச் செயல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. அத்துடன் மதுபானக் கடைக்கு அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகம், புதுச்சேரி அரசைக் கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். 1 மணிநேரம் நீடித்த சாலை மறியலால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தள்ளுமுள்ளு
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீசாரும், போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் துணை கலெக்டர் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், முடிவு எட்டப்படவில்லை. அதே வேளையில் மறியலில் ஈடுபட்டு கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.