முக்கிய குற்றவாளி ஊருக்குள் நுழைய தடை நீடிப்பு


முக்கிய குற்றவாளி ஊருக்குள் நுழைய தடை நீடிப்பு
x

காரைக்காலில் பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன் ஊருக்குள் நுழைய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்

பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன் ஊருக்குள் நுழைய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க. செயலாளர் கொலை

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளராக இருந்தவர் தேவமணி (வயது 52). இவர் திருநள்ளாறு-சுரக்குடி சந்திப்பில் வசித்து வந்தார். தேவமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (32) என்பவருக்கும் இட பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி இரவு, தேவமணியை அவரது வீட்டின் அருகே மணிமாறன் கூலிப்படையினரை வைத்து வெட்டி கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் மணிமாறன் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன், புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மணிமாறன் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து, கடந்த மார்ச் 21-ந் தேதி, நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் வெளியே வந்தார். அதன்படி திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் திங்கள், வெள்ளி ஆகிய 2 நாட்கள் காலை 10.30 மணி அளவில் கையெழுத்திட்டு வந்தார்.

மேலும் 2 மாதங்கள் தடை நீடிப்பு

இதையடுத்து மணிமாறன் அடிக்கடி திருநள்ளாறு வந்தால், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் 144 பிரிவின் கீழ் (குற்றவியல் நடைமுறை சட்டம்) குறிப்பிட்ட நேரத்தை (திங்கள், வெள்ளி காலை 10 மணி முதல் 10.30 வரை) தவிர காரைக்காலில் நுழைய தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு முடிவுற்ற நிலையில் நேற்று முதல் மேலும் 2 மாதங்கள் குறிப்பிட்ட நேரத்தை தவிர மணிமாறன் திருநள்ளாறுக்குள் நுழைய தடை விதித்து சார்பு நீதிபதி சமயோக் ஜெயின் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story