போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி
புதுவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீஸ்காரர்
புதுச்சேரி மடுகரை அருகே உள்ள இந்திராநகரை சேர்ந்தவர் மலையராஜா (வயது 49). இவர் புதுவை காவல்நிலைய தலைமையகம் அருகே உள்ள கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணி செய்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
மலையராஜா கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சையும் பெற்றுவந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது காலில் ஏற்பட்ட காயம் சரியாகவில்லை. இதற்காக சிகிச்சை பெற்றும் அந்த காயம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சர்க்கரை நோய் காரணமாக காலில் உள்ள விரல்களை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் அவரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கோரிமேட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீஸ்காரர் நாகராஜ் என்பவர் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.