சாராய கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை


சாராய கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x

புதுவையில் கலால்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று சாராய கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரி

கலால்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று சாராய கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

கள்ளச்சாராயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம், புதுச்சேரியில் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கள்ளச்சாராயம் புதுச்சேரியில் இருந்து கடத்தி செல்லப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. எனவே கள்ளச்சாராய தயாரிப்பு எங்காவது நடைபெறுகிறதா? என்பது குறித்து புதுவை போலீசாரும், கலால்துறையினரும் தொடர்ந்து தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் சாராயக்கடைகளிலும் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை

இந்த நிலையில் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் சாராயக் கடைக்காரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர், சத்யநாராயணா மற்றும் சாராயக்கடை உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், சாராய விற்பனை தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகளை போலீசார் விளக்கி கூறினார்கள்.

எச்சரிக்கை

சாராயக்கடைகளில் கலால் துறையின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், சட்ட விரோத விற்பனைக்கு யாரும் துணைபோகக் கூடாது, யாரேனும் மொத்தமாக சாராயம் கேட்டால் வழங்கக் கூடாது, அதிக போதைக்காக வேறு ஏதேனும் சேர்க்கக்கூடாது என்று அறிவுறுத்தினர்.

மேலும், அன்றாட விற்பனை தொடர்பான தகவல்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், இவற்றை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.


Next Story