2 சாமி சிலைகளை மீட்டுத்தர போலீசில் புகார்


2 சாமி சிலைகளை மீட்டுத்தர போலீசில் புகார்
x

60 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 2 சாமி சிலைகளை மீட்டுத்தர போலீசில் புகார்

காரைக்கால்

காரைக்காலை அடுத்த மேலகாசாக்குடி கிராமத்தில், புதுச்சேரி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நாகநாதசுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், கடந்த 1963-ம் ஆண்டு விலை உயர்ந்த நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடப்பட்ட சிலைகளை போலீசார் தேடிவந்தனர். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த சிலைகள் அமெரிக்காவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள 2 சிலைகளையும் மீட்டுத் தருமாறு கோவில் நிர்வாகம் மற்றும் புதுச்சேரி இந்து அறநிலையத்துறை சார்பில் காவல்துறை தலைமையகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசின் உத்தரவுப்படி, காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் லெனின்பாரதி, செந்தில்குமார், பிரவீன்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட

கோவிலுக்கு சென்று, கோவில் நிர்வாக உறுப்பினர் மற்றும் கிராம நிர்வாகத்தினரிடம் விசாரித்தனர். விசாரணை அறிக்கை, இந்து அறநிலையத்துறைக்கும் காவல்துறை தலைமையகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story