குடிநீர் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
வில்லியனூர் அருகே குடிநீர் கேட்டு அடுத்தடுத்து 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே குடிநீர் கேட்டு அடுத்தடுத்து 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் கேட்டு...
வில்லியனூர் அருகே தொண்டமானத்தம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, மாந்தோப்பு, புளியந்தோப்பு, ரங்கசாமி நகர், காமராஜர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீரின்றி தவித்தனர். இன்று காலை வரையும் தண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தேரடி அருகே பத்துக்கண்ணு-சேதராப்பட்டு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இதேபோல் தொண்டமானத்தம் சாராயக்கடை அருகேயும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசார் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உடனடியாக டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
சேதராப்பட்டு பகுதியிலும் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பத்துக்கண்ணு-சேதராப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சேதராப்பட்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி டேங்கர்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
குடிநீர் கேட்டு அடுத்தடுத்து 3 இடங்களில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.