கடலில் கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் ரோந்து
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு புதுவை கடலில் கடலோர காவல்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன.
புதுச்சேரி
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு புதுவை கடலில் கடலோர காவல்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன.
தீவிர பாதுகாப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று புதுச்சேரி வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், இன்று இரவு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் இல்லத்தில் தங்கினார். அந்த இல்லத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல் கடற்கரை சாலையில் இன்று காலை முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தடுப்புகள் வைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும், புதுவை கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
தீவிர ரோந்து
புதுச்சேரி கடலில் இந்திய கடலோர பாதுகாப்பு படை, புதுச்சேரி கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. புதுச்சேரி கடலோர பகுதியில் இன்று இரவு முதல் மீன்பிடி படகுகள் அனுமதிக்கப்படவில்லை.
ஜனாதிபதி இன்று மாலை முருங்கப்பாக்கம், திருக்காஞ்சி ஆகிய பகுதிகளுக்கு சென்றார். எனவே அந்த பகுதிகளில் உள்ள 15 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று மதியத்திற்கு மேல் விடுமுறை விடப்பட்டு இருந்தது.