லாரி சக்கரத்தில் சிக்கி பெயிண்டர் பலி
திருபுவனை அருகே மழைக்காக ஒதுங்கிய பெயிண்டர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி பலியானார்.
திருபுவனை
திருபுவனை அருகே மழைக்காக ஒதுங்கிய பெயிண்டர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி பலியானார்.
பெயிண்டர்
திருபுவனை அருகே திருபுவனைபாளையம் பெருமாள் நகரை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 37). பெயிண்டர். இவருக்கு மேகலாதேவி என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
நேற்று மாலை திருபுவனைபாளையத்தில் கடலூர் சாலை பிள்ளையார் கோவில் வழியாக தேவநாதன் நடந்து சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்தது. உடனே அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த லாரி முன் மழைக்காக ஒதுங்கி நின்றார்.
உடல் நசுங்கி பலி
அப்போது லாரியின் முன்னால் தேவநாதன் நின்று கொண்டிருந்தது தெரியாமல் அவரை மோதி தள்ளி விட்டு லாரியை டிரைவர் ஓட்டிக் கொண்டு சென்று விட்டார்.
இந்தநிலையில் சாலையோரம் தேவநாதன் உடல் நசுங்கி பிணமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனே வில்லியனூர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேவநாதனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் மழைக்காக தேவநாதன் லாரியின் முன்பகுதியில் ஒதுங்கி நின்ற நிலையில் அது தெரியாமல் லாரியை டிரைவர் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
லாரி டிரைவர் யார்?
இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மழைக்காக ஒதுங்கிய பெயிண்டர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான விபரீத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.