ஆடி அமாவாசையையொட்டி கடலில் தீர்த்தவாரி


ஆடி அமாவாசையையொட்டி கடலில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 16 Aug 2023 9:43 PM IST (Updated: 16 Aug 2023 10:49 PM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுவை கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

புதுச்சேரி

ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுவை கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தர்ப்பணம்

ஆண்டுதோறும் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதை இந்துக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வந்தன. கடந்த மாதம் (ஜூலை) 17-ந் தேதி, அதாவது ஆடி 1-ந் தேதி அமாவாசை தினம் வந்தது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமாக இருக்காது. 2-வது அமாவாசையில் திதி கொடுப்பது சிறந்த பலனை தரும் என்று ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, ஆடி 2-வது அமாவாசை தினமான இன்று புதுவை கடற்கரையில் உறவினர்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதிகாலை முதலே கடற்கரையில் திரண்ட அவர்கள் காய்கறி வகைகளை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் கடலில் புனித நீராடினார்கள்.

திருக்காஞ்சி

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றிலும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுவை மட்டுமல்லாது கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சங்கராபரணி படித்துறையில் தர்ப்பணம் கொடுத்தனர்.

கடல் தீர்த்தவாரி

ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜபெருமாள், காமாட்சி அம்மன், சாரம் சுப்ரமணியர் மற்றும் பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவமூர்த்தி சாமிகள் மேளதாளம் முழங்க கடற்கரையில் தீர்த்தவாரிக்காக அணிவகுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். சிலர் அன்னதானம், பிரசாதங்களை வழங்கினார்கள்.

புதுவை கடற்கரை காந்தி சிலை அருகே ஒட்டுமொத்தமாக உற்சவர்கள் அணிவகுப்பது வழக்கம். இந்தமுறை சுதந்திர தினவிழா பந்தல் பிரிக்கப்படாததால் பல உற்சவமூர்த்திகள் தலைமை செயலகம் அருகே நடந்த தீர்த்தவாரியில் கலந்து கொண்டன.


Next Story