என்.ஆர்.காங்கிரசார் சாலை மறியல்-உருவபொம்மை எரிப்பு
ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி என்.ஆர்.காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் உருவ பொம்மையையும் எரித்தனர்.
வில்லியனூர்
ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி என்.ஆர்.காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் உருவ பொம்மையையும் எரித்தனர்.
வில்லியனூர்
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ஸ்ரீநிவாஸ் அசோக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் சங்கர், ரேவதி பற்குணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயபால், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், என்.ஆர்.இலக்கிய பேரவை தனசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஏனாம் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் உருவபொம்மையை எரித்தனர்.
மதகடிப்பட்டு
மதகடிப்பட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரது உருவப்பொம்மையையும் எரிக்க முயன்றனர். தகவல் அறிந்து வந்த திருபுவனை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுவை ராஜீவ்காந்தி சதுக்கத்தில் என்.ஆர்.காங்கிரசார் ராமமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தவளக்குப்பம்
மணவெளி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் சுயேச்சை எம்.எல்.ஏ.ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் இன்று மாலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேந்திரன் வரவேற்று பேசினார். என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் காத்தவராயன், அகிலன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் பச்சையப்பன் ரமேஷ், கன்னியப்பன், அக்ரி கணேஷ் மற்றும் மணவெளி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காரைக்கால்
காரைக்காலில் அமைச்சர் சந்திர பிரியங்காவின் ஆதரவாளர்கள் மற்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியமிடம் மனு கொடுத்தனர்.