145 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அடுத்தவாரம் அறிவிப்பு
145 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அடுத்தவாரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி
145 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அடுத்தவாரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதிய கல்வியறிவு திட்டம்
பள்ளி படிப்பை தவறவிட்ட அனைவருக்கும் கல்வி அளிக்கும் 'உல்லாஸ்' என்ற புதிய கல்வியறிவு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி 2027-ம் ஆண்டிற்குள் 15 வயதுக்கு மேற்பட்ட படிக்காதவர்கள் அனைவருக்கும் தன்னார்வ ஆசிரியர்களை கொண்டு எழுத்தறிவோடு, கைபேசி மூலம் பணபரிமாற்றம் செய்தல், ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்துதல், இ-சட்ட அறிவை பெறுதல், படிவங்களை பூர்த்தி செய்தல், சுகாதார கல்வியை பெறுதல் உள்ளிட்ட வாழ்க்கை திறன்களை கற்று தரப்பட உள்ளது.
இதுதொடர்பாக 6 மாதத்துக்கு ஒருமுறை தேர்வு நடத்தி சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் நேரடி வகுப்பு மற்றும் இணையவழி கல்வி ஆகிய முறைகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
புத்தொளி புத்தகம்
இந்த திட்டத்தின் தொடக்கவிழா லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. பள்ளிக்கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு 63 வயதான கலாவதி என்ற மூதாட்டிக்கு சேர்க்கையை இணையதளத்தில் பதிவு செய்தார். மேலும் கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள புத்தொளி என்னும் 4 தொகுதிகள் அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
100 சதவீதம் எழுத்தறிவு
புதுவை மாநிலத்தில் கிட்டத்தட்ட அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதுதொடர்பான கணக்கெடுப்பு கடந்த 2011-ம்ஆண்டு நடத்தப்பட்டது. இப்போது இன்னும் எழுத்தறிவு பெறாதவர்களை தேடி கண்டறிந்து இந்த திட்டத்தில் சேர்த்து கற்றுத்தர வேண்டும்.
நமது மாநிலம் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக வரவேண்டும். புதுவை அரசின் கல்வித்துறை புதிய உத்வேகத்தோடு செயல்படுகிறது. கல்விக்காக இந்த ஆண்டு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்தவாரம் அறிவிப்பு
ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் 145 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான கோப்பு நிதித்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அதுதொடர்பான அறிவிப்பும் வெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, தேசிய எழுத்தறிவு மைய பொறுப்பாளர் உஷா சர்மா, மாநில எழுத்தறிவு மைய தலைவர் சுகுணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.