காரைக்கால் அம்மையார் கோவிலில் நவராத்திரி கொலு
காரைக்கால் அம்மையார் கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது.
காரைக்கால்
இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி காரைக்கால் அம்மையார் கோவிலில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் நிகழ்ச்சி இன்று இரவு தொடங்கியது. திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் நவராத்திரி கொலு தர்பார் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இந்த கொலு தர்பாரில், நவநீதேஸ்வரர், வேல்நெடுங்கன்னி அம்மன், திருச்செந்தூர் சூரசம்ஹாரம், ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி, மகிஷாசுரமர்த்தினி, சபரிமலை அய்யப்பன் உள்ளிட்ட பல தெய்வங்களை காட்சிகளாக அமைக் கப்பட்டுள்ளது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி காளிதாசன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
இதேபோல திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலிலும் நவராத்திரி விழா இன்று தொடங்கியது. அம்பாள் பிரணாம்பிகைக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.