புதுவை அரசியலில் நாராயணசாமி தலையிடக்கூடாது
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்றும், புதுவை அரசியலில் நாராயணசாமி தலையிடக்கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல்காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
புதுச்சேரி
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்றும், புதுவை அரசியலில் நாராயணசாமி தலையிடக்கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல்காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
தேர்தல் தோல்வி
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த 42 நிர்வாகிகள் கையெழுத்திட்டு ராகுல்காந்திக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
புதுவை காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதுவை மண் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த தோல்விக்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் முக்கிய காரணம் ஆவார்கள்.
காங்கிரஸ் மேலிடம் 2021-ம் ஆண்டு சட்டசபை தோல்விக்கு காரணம் தொடர்பாக தினேஷ்குண்டுராவ், உத்தம் ரெட்டி ஆகியோரை புதுவைக்கு சென்று ஆராய அனுப்பினார்கள். இதில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியத்தை மாற்ற வேண்டும் என தலைமைக்கு தெரிவித்தனர். ஆனால் தேர்தல் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாற்றப்படவில்லை.
புதிய தலைவர்
காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய கோரிக்கை புதுவை மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் தான் வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். மேலும் புதுவை அரசியலில் நாராயணசாமி தலையிடக்கூடாது.
புதுவை மாநிலத்துக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும். மேலும் கட்சி தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை பெற முடியும். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடியும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
ராகுல்காந்திக்கு புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் எழுதிய கடிதத்தால் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.