நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா


நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா
x
தினத்தந்தி 21 July 2023 10:42 PM IST (Updated: 22 July 2023 5:21 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செடல் திருவிழா

புதுவை-கடலூர் சாலை நைனார் மண்டபத்தில் பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 40-ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சாமி வீதி உலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் விழா இன்று நடந்தது. இதையொட்டி காலையில் நாகமுத்து மாரியம்மன், முத்து மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலை செடல் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேர்த்திக்கடன்

அதேபோல் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கார், ஜீப், வேன், மினிவேன், லாரி ஆகியவற்றை பக்தி கோஷமிட்டபடி இழுத்துச் சென்றனர். இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதில் மோட்டார் சைக்கிளில் முருக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் தங்கள் குழந்தைகளை மோட்டார் சைக்கிளின் மீது வைத்து முருக பெருமானின் அருளை பெற்றனர்.

இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேர்பவனி நடந்தது. இதில் சம்பத் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து மாற்றம்

விழாவில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டும் ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி விழாவும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.


Next Story