எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுது


எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுது
x

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுதாகி செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுதாகி செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

அரசு பொது மருத்துவமனை

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, ஒரு அரசு மருத்துவக்கல்லூரி, 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சட்டசபை வளாகம் அருகே அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். விபத்துகளில் சிக்கி காயம் அடைபவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போது தலைக்காயத்தை கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்படுவது வழக்கம்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன்

இது அவசியமானது என்பதால் புதுவை அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகளுக்கு முன் ரூ.3 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டது. ஆபத்தான நிலையில் வந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு இந்த கருவி பெரும் உதவியாக இருந்து வந்தது.

முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த கருவி பழுதடைந்தது. கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக செயல்படாமல் முடங்கியே கிடக்கிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக குறிப்பிட்ட ஒரு தனியார் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு வந்தது. இதற்கான கட்டணத்தை ஒப்பந்த அடிப்படையில் அரசு செலுத்தி வந்தது. நிதி நெருக்கடியில் இருந்து வரும் நிலையில் அரசுக்கு இது கூடுதல் சுமையாக இருந்து வந்தது.

உயிர் சேதம்

இந்த நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி வாங்கப்பட்டு உள்ளது. தற்போது புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கும் அவர்களுக்கு உடனடியாக ஸ்கேன் எடுக்க முடிவது இல்லை. இதனால் உடனடியாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் காலதாமதத்தால் உயிர்சேதம் அபாயம் உள்ளது.

அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் ஏழைகள் தான். அவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க பொது மருத்துவமனையில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

சில மாதங்களில்...

இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டபோது, 'அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பழுதாகி உள்ளது. இதற்கு மாற்றாக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுகின்றனர். அரசு பொது மருத்துவமனையில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்கள் அது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என்றார்.


Next Story