சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவுரை
மக்கள் அமைதியாக வாழ சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என புதிதாக தேர்வு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவுரை வழங்கினார்.
புதுச்சேரி
மக்கள் அமைதியாக வாழ சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என புதிதாக தேர்வு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவுரை வழங்கினார்.
53 சப்-இன்ஸ்பெக்டர்கள்
புதுவை காவல்துறையில் உதவி-சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகளுக்கு துறை ரீதியான தேர்வு நடத்தி 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி சீனியாரிட்டு அடிப்படையில் 29 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 178 ஏட்டுகள் என மொத்தம் 207 பேர் எழுதத்தகுதி பெற்றனர்.
அவர்களுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி எழுத்து தேர்வும், 24-ந்தேதி சீருடை சரிப்பார்ப்பு மற்றும் அணிவகுப்பு, நடைபயிற்சி என பல்வேறு தேர்வு நடத்தப்பட்டது.
இறுதியாக 53 பேர் சப்-இன்ஸ்பெக்டராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை புதுவை கோரிமேடு காவலர் சமுதாயக்கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் டி.ஜி.பி. சீனிவாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 53 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டராக பணி ஆணை வழங்கி பேசியதாவது:-
சட்டம்-ஒழுங்கு
சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் காவல்துறை அதிகாரிகளுக்கு முக்கிய பங்குள்ளது. அதேபோல் போக்குவரத்து நெரிசலை சரி செய்வது, போதை பொருட்கள் விற்பனை, சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இதற்காக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பணி முதல் ஊர்க்காவல் படை வரை பதவி உயர்வு சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக காவல்துறைக்கென்று அதிக நிதி ஒதுக்கி காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ., ஐ.ஜி.பிரிஜேந்திரகுமார் யாதவ், போலீஸ் சூப்பிரண்டுகள் நாரா.சைதன்யா, அனிதாராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.