தமிழில் மருத்துவக் கல்வி; புதுச்சேரி முதல்-மந்திரியுடன் ஆலோசித்து நடவடிக்கை - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்


தமிழில் மருத்துவக் கல்வி; புதுச்சேரி முதல்-மந்திரியுடன் ஆலோசித்து நடவடிக்கை - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
x

விருப்பப்பட்டவர்கள் தமிழ் வழியில் படிப்பதற்கு புத்தகம் தயாரிப்பதற்காக குழு அமைக்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நடைபெற்ற மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழாவில், புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;-

"புதுச்சேரியில் தமிழில் மருத்துவக் கல்வியை கொண்டு வர முதல்-மந்திரி ரங்கசாமியுடன் ஆலோசனை செய்து குழு அமைக்கப்பட்டு, மத்திய பிரதேசத்தில் அவர்கள் மொழியில் மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல், தமிழிலும் மருத்துவக் கல்வியை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

முழுமையாக தமிழ் மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடியாவிட்டாலும், விருப்பப்பட்டவர்கள் தமிழ் வழியில் படிப்பதற்கு புத்தகம் தயாரிப்பதற்காக குழு அமைக்கப்படும். சுமார் 6 மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரி புத்தகங்களை தமிழில் தயாரிப்பதற்கு அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும். ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன், நான் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

தாய் மொழியில் நமது தமிழ் மொழி மருத்துவக் கல்வியை கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும், ஒரு மருத்துவர் என்ற முறையில் எனது ஏற்பாடுகளை செய்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story