பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்


பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
x

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதுவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதுவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

புதுவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளரும், கலெக்டருமான வல்லவன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொற்று அதிகரிப்பு

புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதுவையிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. புதுவை யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைகளில் 15 சதவீதம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. எனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மக்கள் அனைத்து பொது இடங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொதுஇடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

மருத்துவமனைகள், ஓட்டல்கள், பார்கள், உணவகங்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை விடுதி, அரசு அலுவலகங்கள், வியாபாரம் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் ஆகிய இடங்களில் பணி செய்பவர்கள் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும்.

தேர்வு கூடங்களில் கிருமி நாசினி

அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டது உறுதி செய்யப்பட வேண்டும். அரசினால் அவ்வப்போது வெளியிடப்படும் அனைத்து அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா விதிமுறைகளை அதாவது, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவைகளை உறுதி செய்யவேண்டும்.

கல்வி நிறுவனங்கள் உரிய செயல்பாட்டு நடைமுறைகளை கவனமாக பின்பற்றி ஊழியர்கள், மாணவர்கள் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்யவேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர்வு கூடங்களை முறையாக சுத்தப்படுத்துவதையும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு தேர்வு கூடத்திலும் கிருமிநாசினி இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

அபராதம் விதிப்பு?

தேர்வின்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். தற்சமயம் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் செயல்பாட்டை பார்த்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் வல்லவன் கூறினார்.


Next Story