கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன


கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன
x

புதுவையில் கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி

கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூய்மை பணி

ஜி20 தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகளில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூலமாக அனைத்து கடல்சார் மாநிலங்களிலும் கடற்கரைத் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை, மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமத்துடன் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடந்தது. இதன் தொடக்க விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

அழிந்து வருகின்றன

'கடற்கரையை சுத்தப்படுத்துவோம்' என்ற உறுதி மொழியுடன் இளைஞர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். முன்பெல்லாம் நிலத்திலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்த கடலில் கொட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் உணவுக்காக மாறி பின்பு நாமே மீன்களை உண்கிறோம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல. கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. இதுபோன்ற ஆபத்துக்களை குறைக்க பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

உங்களுக்கு சுதந்திர இந்தியா வேண்டுமா? அல்லது தூய்மையான இந்தியா வேண்டுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு "எனக்கு தூய்மையான இந்தியா தான் முதலில் வேண்டும். ஏனென்றால் சுத்தமான இந்தியா தான் உண்மையான சுதந்திரமான இந்தியா" என்று காந்தியடிகள் கூறியதை பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் நினைவு கூறினார்.

விழிப்புணர்வு

'தூய்மை இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சுகாதார கேட்டினால் ஏற்படும் நோய்களை தடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. "சுத்தம் சோறு போடும்" என்று தமிழில் பழமொழியும் உண்டு. புதுச்சேரி கடற்கரை சார்ந்த மாநிலம். எனவே, புதுச்சேரியில் கடற்கரை, கடலை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிச்சயமாக கொண்டு வர வேண்டும். கடலை சுத்தப்படுத்துவதன் மூலமாக நமது குடலும் சுத்தப்படுத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்குமான சுகாதாரத்தை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயமாக இது இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பரிசுகள்

நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை மற்றும் மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து சுற்றுச்சூழல் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கியும் அவர் ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சுற்றுச்சூழல்துறை செயலாளர் முத்தம்மா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story