மணப்பட்டு காட்டுப்பகுதியில் தீ
பாகூாில் மணப்பட்டு வனத்துறைக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் திடீரென இந்த காட்டில் தீப்பிடித்தது.
பாகூர், ஜூலை.17-
பாகூர் தொகுதி அருகே உள்ள மணப்பட்டு கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் காடு உள்ளது. இங்கு முந்திரி, நெல்லி, நாவல், பனை, சவுக்கு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இன்று காலை திடீரென இந்த காட்டில் தீப்பிடித்தது. அங்கிருந்த பனை, சவுக்கு மரங்கள் பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. அங்கு பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது முடியவில்லை. இதுகுறித்து பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் பக்கிரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பெரும்பாலான பனை, சவுக்கு மரங்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து வனத்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.