காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்
மாங்கனி திருவிழாவில் இன்று காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
காரைக்கால்
மாங்கனி திருவிழாவில் இன்று காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மாங்கனி திருவிழா
63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த திருவிழா கைலாசநாதர் கோவில் உள்ளேயே, பக்தர்கள் இன்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.
திருக்கல்யாணம்
திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் காரைக்கால் அம்மையார், பரமதத்த செட்டியார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல் யாணம் விமரிசையாக நடந்தது.
விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள், நாஜிம், நாக.தியாகராஜன், திருமுருகன், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன் மற்றும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மையாரின் மாங்கனி அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
பிச்சாண்டவர் வீதியுலா
மாங்கனி விழாவை யொட்டி இன்று இரவு கைலாசநாதர் கோவிலில் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் 3-ம் நாளான நாளை (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியாக காலை 7 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு மற்றும் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.