காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் மாம்பழங்களை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்கால்
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் மாம்பழங்களை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாயன்மார்களில் ஒருவர்
63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் சார்பில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திருவிழா பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா கடந்த 11-ந் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் -பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது.
சிவபெருமான் வீதி உலா
3-ம் நாளான இன்று காலை முக்கிய திருவிழாவான பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் இருந்து சிவபெருமான், பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதி உலா வந்தார்.
இதை புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன், திருமுருகன், சிவா, கலெக்டர் முகமது மன்சூர் மற்றும் பலர் மாங்கனி, பட்டு வஸ்திரங்களோடு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் வீதியுலா காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக சென்று மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடைந்தது.
வாரி இறைப்பு
அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையின் இருபுறங்களில் நின்றபடி மாம்பழங்களை வாரி இறைத்தனர். அதை ஊர்வலத்தில் வந்த பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்துச் சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் ஆர்வத்துடன் மாம்பழங்களை எடுத்துச் சென்றனர்.
மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்காலில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
நேற்று இரவு, பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்துச் சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து இரவில் சிக்தி விநாயகர் கோவிலில் பரமதத்தருக்கு 2-ம் திருமணம், 11 மணிக்கு புனிதவதியார் புஷ்ப பல்லக்கில் பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவை முன்னிட்டு மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார்.