காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா 11-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காரைக்கால்
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா 11-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காரைக்கால் அம்மையார்
இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையார்.
இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில், காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா வருகிற 11-ந் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 12-ந் தேதி காலை 11 மணிக்கு புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் (சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடும், 13-ந் தேதி பிச்சாண்டவ மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா பாலாபிஷேகமும் நடைபெறுகிறது.
மாங்கனிகள் இறைக்கும் நிகழ்ச்சி
தொடர்ந்து, காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் பவழக்கால் விமானத்தில் பத்மாசத்தமர்ந்து, வேதபாராயணத்துடன் வாத்தியங்கள் முழங்க வீதியுலாவும், அதேசமயம், பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
14-ந் தேதி அதிகாலை, சிவதரிசனப் பயனைத்தரும் பஞ்சமூர்த்திகளும், கயிலாச வாகனத்தில் எழுந்தருளி காரைக்கால் அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், காரைக்கால் அம்மையார் கோவில், கைலாசநாதர் கோவில், பந்தல் உள்ள பாரதியார் சாலை உள்ளிட்ட பகுதி களில் ஆய்வு செய்தார்.
அப்போது தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், கோவில் அறங்காவல் குழு துணைத்தலைவர் புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
வழிகாட்டுதல்
தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கூறுகையில், மாங்கனித் திருவிழா பாதுகாப்பு பணிக்கு, கூடுதலாக புதுச்சேரியில் 60 போலீசாரை அனுப்புமாறு கேட்டுள்ளோம். கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்படவுள்ளது.
காரைக்காலில் கொரோனா மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பு இருப்பதால், பக்தர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். திருவிழாவுக்கு வருவோர் அனைவரும் அவசியம் முகக் கவசம் அணிய வேண்டும். பக்தர்களுக்கு சிரமம் இன்றி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.