பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்
புதுவையில்‘இன்ஸ்டாகிராம்' மூலம் பெண்ணிடம் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
'இன்ஸ்டாகிராம்' மூலம் பெண்ணிடம் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிரட்டல்
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 31 வயது பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் செல்போனுக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர், அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பினார். மேலும் தங்களது ஆபாச படம் தன்னிடம் நிறைய இருப்பதாகவும், அதனை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.8 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் செய்வதறியாது திகைத்து போனார். தனது கணவரிடம் கூற முடியாமல் தவித்தார். வேறுவழியின்றி அந்த நபருக்கு ரூ.8 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தார்.
இதற்கிடையே அந்த மர்ம நபர் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் வேறு வழியின்றி தனது கணவரிடம் தெரிவித்தார்..
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
இது தொடர்பாக அந்த பெண் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இணைய வழி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், 'முகம் தெரியாத நபர்களிடம் இணையதளம் மூலமாக தொடர்பு கொள்ள கூடாது. தெரியாத நபர்களிடமிருந்து வருகிற அழைப்பை ஏற்க வேண்டாம். மேலும் அறிமுகமில்லாத நபர்களிடமோ அல்லது புதிய எண்ணில் இருந்து வருகிற வீடியோ கால்களை எடுக்க வேண்டாம். முக்கியமாக பெண்கள் இணையதளங்களை கையாளும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதாவது இணைய வழி மிரட்டல்கள் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்' என்றார்.