பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்வு
தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி
தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
மீனவர்களுக்கு மானியம்
புதுச்சேரியில் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தி மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக மீனவர்களுக்கான இடுபொருள் மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தொகை ஏக்கருக்கு ரூ.7,500-ல் இருந்து ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக தொழிற்பயிற்சி நிறுவனங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவோருக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் மூலப்பொருள் செலவினத்திற்கான இழப்பீடு ஆகியவற்றை உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை உயர்வு
அதன்படி எஸ்.எஸ்.எல்.சி., ஐ.டிஐ. அல்லது மேல்நிலைக் கல்வி முடித்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படுகிறது. பட்டம், தொழில்நுட்பத்தில் பட்டயம் முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும், தொழில்நுட்பத்தில் பட்டம், முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சிறப்பு, உயர்திறன் பயிற்சி பெறுவதற்கான பயிற்சி உதவித் தொகை மேல்நிலை கல்வி, ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 -ல் இருந்து ரூ.7,500 ஆகவும், பட்டம், பட்டயம் முடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரம் ஆகவும் உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.