5 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு


5 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு
x

புதுச்சேரி அரசு துறைகளில் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு துறைகளில் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

பயிற்சி நிறைவு

புதுச்சேரியில் கடந்த 2022-ம் ஆண்டு 382 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி முதல் கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் ஒராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா இனறு மாலை கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது.

விழாவிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால் முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பயிற்சி முடித்த காவலர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி பேசியதாவது:-

வேலைவாய்ப்பு

போலீசார் பொதுமக்களின் நண்பராக இருந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும். இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக காவல்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பின்னர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உறுதி கூறினோம். அதன்பேரில் முதற்கட்டமாக 382 காவலர்கள் பயிற்சி முடித்துள்ளனர்.

மேலும் 252 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காவலர் தேர்வில் யாரும் குறைகூற முடியாது. இதன் மூலம் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.

புதுவையில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். அப்போது தான் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் எண்ணம் அரசுக்கு உண்டு. காவல்துறையில் மேலும் 1,050 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மற்ற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை சேர்த்து 5 ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நமச்சிவாயம்

விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'காவலர் பணியிடங்கள் அனைத்தும் நேர்மையான முறையில் நிரப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, ஏழை மக்களுக்கும் அரசு பணிக்கு வரமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், ஊர்காவல்படை வீரர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். புதுச்சேரி சிறந்த மாநிலமாக மாறும்' என்றார்.

விழாவில் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்தமோகன் உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிதாக பயிற்சி முடித்த காவலர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.


Next Story